Sunday, July 18, 2010

தேங்காய் சுட்டாச்சா?


    ஆடி 1ம் தேதி தேங்காய் சுட்ட அனுபவங்கள்:

  சுமார் 40 வருடங்களுக்கு முன் சிறு வயதில் பள்ளிக்கூடம் படிக்கும் போதிருந்தே  ஆடி 1ம் தேதி தேங்காய் சுடும் பண்டிகை எப்போது வரும் என்று முன்கூட்டியே கணக்குப் போட்டு வைத்திருப்போம். தேங்காய் வேண்டும் என்று ஒரு வாரத்திற்கு முன்பே எங்கள் தாயாரை நச்சரித்து  ஆளுக்கு ஒரு தேங்காய் ரிசர்வ் செய்து எடுத்து வைத்து பள்ளியில் இருந்து வந்ததும் சிமெண்ட் தரையில் மணல் தூவி மேலுள்ள நார்த்துகள்கள் நீங்கும் வரை நன்றாக உரைப்போம். நான்கைந்து நாட்கள் உரைத்து வருடக்கணக்காக வழுக்கைத்தலையாக உள்ளவர்கள் தலைபோல் வழுவழுப்பாக ஓட்டைத் தேய்த்து வைத்திருப்போம். 
    ஆடி 1ம் தேதி மாலை எங்கள் தகப்பனார் தேங்காய்க் கண்களை ஓட்டையிட்டு நீரை வடித்துவிட்டு அதில் லேசாக வறுத்தஎள்,பச்சரிசி,உடைத்த பச்சைப்பயிறு,நாட்டுசர்க்கரை கலந்த கலவையை ஊசிமூலம் குத்தி முக்கால் பங்கு நிரப்பி சிறிதளவு தேங்காயில் இருந்து வடித்த நீரை சேர்ப்பார்(இந்தக் கலவி வேக நீர் வேண்டுமல்லவா) பின்பு அழிஞ்சில் குச்சியை சரியாகச் செதுக்கி தேங்காய்க் கண்ணில் செருகி தேங்கய்,குச்சி ஆகியவற்றுக்கு மஞ்சள் பூசி தேங்காய் சுடப் புறப்படுவோம். எங்கல் தெருவில் உறவினர்கள், பக்கத்து வீட்டினர் எல்லாம் சேர்ந்து ஒரே இடத்தில் பனை ஓலை. விறகு ஆகியவற்றை எரித்து சுமார் 40-50 தேங்காய்கள் ஒன்றாகச் சுடுவோம். அதில் பாதிக்கு மேல் கிச்சிகள் தேங்காயில் செருகி உள்ள இடமும் எரிந்து தேங்காய்களும் விழுந்துவிடும். ஆளுக்கு ஒன்றாக எடுத்துக் கொள்ளவேண்டியதுதான். அதிலும் நான் பெரிய தேங்காய் கொண்டு வந்தேன், இப்போது அதைக் காணவில்லை,சிறிய தேங்காய்தான் உள்ளது என்று சிலர் பிரச்னையைக் கிளப்புவார்கள். 


    ஆனால்  இப்போது குழந்தைகளும் அப்போது போல் தேய்ப்பதில்ல. கத்தியால் நார்த்துகள்களை சுரண்டிவிட்டு அவரவர் வீட்டில் தனியாக விறகு அடுப்பிலோ கேஸ் அடுப்பிலோ சுட்டுவிடுகிறார்கள். 


   சுட்ட தேங்காயை அருகில் உள்ள கோயிலுக்கு எடுத்துச் சென்று உடைத்து அங்கே சிறிதளவு வைத்துவிட்டு வழிபட்டு வருவோம். உள்ளே வைத்த கலவை வெந்து தனி ருசியாக இருக்கும். தேங்காயில் உள்பக்க நாட்டு சர்க்கரையின் இனிப்பும் ஏறி சுட்ட தேங்காயின் மணத்துடன் ருசியாக இருக்கும்.

        இந்தத் தேங்காய் சுடும் வழக்கம் எதற்காக செய்யப்படுகிறது என்ற விளக்கம் எனக்கு இதுவரை தெரியவில்ல. பெரியவர்கள் செய்ததை அப்படியே செய்து கொண்டிருக்கிறோம். யாராவது இது பற்றித்தெரிந்தவர்கள் விளக்கம் அளித்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்









1 comment:

  1. நான் இதுவரை கேள்விப்படாத தேங்காய் சுடும் ரெசிபி.
    கலவையெல்லாம் பார்க்கும் பொழுது ருசி சூப்பராக இருக்கும் போல்தான் தெரிகிறது.....

    ReplyDelete