Friday, July 29, 2011

அழகன் முருகனை நாடி ஆன்மீகப் பயணம்


       சிறுவாபுரி ஆலயம் பற்றி மணிராஜ் என்ற பதிவில் இராஜராஜேஸ்வரி அவர்கள் விரிவான முறையில் எழுதியுள்ளார்கள். அதன் இணைப்பு கீழே உள்ளது.
இப்பதிவில் ஆலயம் பற்றிய அனைத்து விபரங்களும் பெறலாம்

இவர் (எங்களூர்) திருச்செங்கோடு முத்துக்குமாரசுவாமி
         நகரத்தார் அமைப்பு ஒன்றின் சார்பாக மாதாமாதம் கிருத்திகையை முன்னிட்டு அம்பத்தூரிலிருந்து சிறுவாபுரிக்குப் பாதயாத்திரை சென்று வருகிறார்கள். ஆடிக்கிருத்திகைக்கு பால்குடங்களும் காவடிகளும் எடுத்துச் சென்று மிகச் சிறப்பாக வழிபடுகின்றார்கள். கடந்த 22 வருடங்களாக இப்பாத யாத்திரை சென்று வருகிறார்கள். நண்பர் ஒருவர் 5 வருடங்களாகச் சென்று வருபவர் அழைத்ததால் இந்த ஆண்டு ஜூலை 23ம் தேதி நானும் எனது உறவினர் ஒருவரும் நடைபயணம் சென்றோம். 23ம் தேதி காலை திருச்செங்கோட்டில் இருந்து புறப்பட்டு அன்று பிற்பகல் திருமுல்லைவாயில் சென்றடைந்தோம். 


         


       அன்று மாலை 7 மணிக்கு 41காவடிகள் வைத்து அத்துடன் அவர்கள்கொண்டு வரும் வேலுக்கு திருமுல்லைவாயில் ஆலயத்தில் அனைத்து அபிஷேகங்களும் நடைபெற்றது. பல அன்பர்கள் வந்திருந்த அனைவருக்கும் சாக்லெட் பிஸ்கட் வழங்கினர். அங்கிருந்த திருமண மண்டபம் ஒன்று வாடகைக்கு எடுத்து வந்திருந்தவர்கள் சிற்றுண்டி அருந்த ஏற்பாடு செய்திருந்தனர். அன்று இரவு சுமார் 9.30 மணிக்குப் புறப்பட்டு ஆவடி HVF காலனியில் உள்ள வள்ளுவர்-வாசுகி திருமண மண்டபத்தில் அனைவரும் உறங்கிச் செல்ல ஏற்பாடு செய்திருந்தனர். அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள செல்வ விநாயகர் ஆலயத்தில் காவடி எடுத்து வந்தவர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார் 11 மணிக்கு அங்கு சென்று தங்கினோம்.        அதிகாலை 2 மணிக்கெல்லாம் வந்திருந்த அனைவருக்கும் காபியும் பன் ஒன்றும் பாதயாத்திரைக் குழுவின் சார்பாக வழங்கினர். டீக்கடைகள் ஏதும் இல்லாத அப்பகுதியில் இது மிகவும் உதவியாக இருந்தது. 3 மணிக்கு நாங்கள் நடக்க ஆரம்பித்தோம். அப்போதே சாரிசாரியாக பக்தர்கள் நடந்து கொண்டிருந்தார்கள். நடந்தவர்களில் சுமார் 60 சதவீதம் பெண்களே. மேலும் குழந்தைகளும் அதிகம் இடம் பெற்றிருந்தனர். வேல் டெக் கல்லூரிகளின் வழியாக நடந்து கொண்டிருந்தோம். மீண்டும் 4 மணிக்கு ஒரு தோப்பில் டீ வழங்கினார்கள். காலை 6 மணிக்கு அம்பத்தூர் நண்பர்கள் சார்பாக ஒரு இடத்தில் டீ,காபி மற்றும் இடியாப்பம் வழங்கினார்கள்.             காலை 8.30 மணிக்குதிருக்கண்டலம் சென்று சேர்ந்தோம். அங்கே தச்சு வேலை செய்யும் ஒருவர் எங்கள் நண்பருக்குச் சென்ற ஆண்டு அறிமுகமானவர் அன்போடு தனது இல்லத்திற்கு அழைத்து காபி கொடுத்து அன்புடன் உபசரித்தார். பின்பு ஆலயம் சென்று சேர்ந்தோம். அதற்கு முன்பாகவே சூடாக சிற்றுண்டி தயாரித்திருந்தார்கள். அங்கு தரிசனம் செய்துவிட்டு சிற்றுண்டி அருந்தி சிறிது ஓய்வு எடுத்தோம். இங்கும் வேலுக்கு அபிஷேகங்கள் நடந்தன. இந்த ஆலயத்தில் சக்தியுடன் கூடிய தட்சிணாமூர்த்தி வடிவத்தைத் தரிசித்தோம். 

சக்தியுடன் தட்சிணாமூர்த்தி

காவடிகள்

அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ்
    ஆலய மூலவர் சிவானந்தேஸ்வரர். அம்பாள் ஆனந்தவள்ளித் தாயார். பகல் உணவு உட்கொண்டு 2.15 மணிக்கெல்லாம் புறப்பட்டு நடக்க ஆரம்பித்தோம். சுமார் 2 கிலோ மீட்டர் தார் சாலையில் சென்று பின்பு வயல்வெளிகளின் வழியே நடந்தோம். நெல் வயல்களில் முதிர்ந்து வரும் நெல் மணிகளின் இனிய மணம் மிக இனிமையாக இருந்தது. 6.30 மணிக்கு சிறுவாபுரி அடைந்தோம். சென்றதும் ஆலயம் சென்று ஒருமுறை இறைவனை தரிசித்துவிட்டு பின்பு நகரத்தார் சத்திரம் அடைந்தோம். அருகில் உள்ள ஒரு அரிசி ஆலையில் இரவு உணவு, மறுநாள் காலை டிபன் மற்றும் பகல் உணவு ஆகியவற்றுக்காக பெரிய ஷாமியானா அமைத்துப் பரிமாறினார்கள். உணவு உட்கொண்டு சத்திரத்தில் வேல் பூஜை பார்த்து உறங்கினோம்

சற்றே கரடுமுரடான பாதை

சில இடங்களில் இப்படி வயல் வரப்பிலும்--முதல் இருவரும்தான் எனது இப்பாதயாத்திரைக்குக் காரணகர்த்தாக்கள்

ஆலய ராஜகோபுரம்


மரகத மயில்


       மறுநாள் காலை 5.30 மணிக்கு ஆலயம் சென்று பாலசுப்ரமணியர் தரிசனம் சிறப்பான முறையில் கிடைக்கப் பெற்றோம். அருகில் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பெரியபாளையம் பவானி அம்பாளை தரிசிக்க பஸ்ஸில் சென்றுவிட்டு 9 மணிக்குத் திரும்பினோம். காலை சிற்றுண்டி முடித்து அங்குள்ள வரதராஜப் பெருமாள் ஆலயம் சென்று தரிசனம் செய்து வந்தோம் . சுமார் 11 மணிக்குக் காவடிகளுடன் சுமார் 500 பக்தர்கள் பால் குடங்கள் எடுத்து ஆலயம் புறப்பட்டார்கள். ஆலயத்தில் உற்சவர் மேடைமேல் வைக்கப்பட்டு இவர்கள் கொண்டு வந்த வேலும் அங்கே வைக்கப்பட்டு பால் குடங்கள் வந்ததும் சிறப்பான அபிஷேகங்கள் நடைபெற்றது. பால் குடம் எடுத்தவர்களும் ஏற்கனவே இருந்த பக்தர்களுமாக ஆலயமே நிரம்பி வழிந்தது. காவல்துறையினர் சிறந்த முறையில் ஏற்பாடுகள் செய்திருந்தது மிகவும் பாராட்டத்தக்கது. பூஜை நடக்கும்போதே நண்பகல் உணவிற்கும் ஏற்பாடு செய்து வழங்கினார்கள்.காலை டிபனும் பகல் உணவும் பரிமாற ஸ்ரீதேவி கலைக்கல்லூரி மாணவ மாணவியர் சிறந்த முறையில் பணியாற்றினர். பின்பு சுமார் 3 மணிக்கு நாங்கள் அங்கிருந்து புறப்பட்டோம். சிறுவாபுரி உற்சவர்


        பாதயாத்திரை ஆரம்பத்தில் இருந்து முடியும்வரை பக்தர்களின் அவசர மருத்துவ உதவிக்காக அப்பல்லோ மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் ஒன்று எங்களுடனேயே வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 23ம்தேதி இரவு முதல் 25ம்தேதி பகல் உணவு வரை பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பான முறையில் இலவச உணவு அளிக்க ஏற்பாடுகள் செய்திருந்ததும் மிகவும் பாராட்டத்தக்கது. அந்த வழிபாட்டுக் குழுவில் இருந்த பெரியவர் ஒருவர் நல்ல வசதி படைத்தவர் எங்களை நினைவு வைத்திருந்து எங்கள் நண்பரை அழைத்து எங்களுக்கு பிரசாதப் பைகள் தர நினைவுறுத்தியது மிக்க நெகிழ்ச்சியான ஒன்றாகும்.முதல்நாளில் இருந்து அவரது காரில்தான் எங்களது பைகளைக் கொண்டுவந்து உதவினார்.  செல்லும் இடங்களிலெல்லாம் டீ,காபி மற்றும் உணவு வழங்க அவர்கள் செய்யும் ஏற்பாடுகள் மிக சிறப்பாக இருந்தன. பின்புநாங்கள் கந்தகோட்டம் ஆலயம் வந்து அங்கேயும் முருகப் பெருமானை தரிசித்து ஊர் திரும்பினோம்.2 comments:

 1. சிறுவாபுரி ஆலயம் பற்றி மணிராஜ் என்ற பதிவில் இராஜராஜேஸ்வரி அவர்கள் விரிவான முறையில் எழுதியுள்ளார்கள். அதன் இணைப்பு கீழே உள்ளது.
  http://jaghamani.blogspot.com/2011/07/blog-post_28.html
  இப்பதிவில் ஆலயம் பற்றிய அனைத்து விபரங்களும் பெறலாம்
  எனது பதிவை அறிமுகப்படுத்தி, சிறந்த முறையில் சுட்டியும் கொடுத்த பாங்கிற்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 2. உடன் நடைபயணத்திற்கு அழைத்துசென்ற மாதிரி நேர்த்தியான படங்களும், அருமையான நடையும்... சிறந்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete