Thursday, June 10, 2010

பர்வதமலைப் பயணம்

          கடந்த 6-6-2010 அன்று திருவண்ணாமலை அருகில் உள்ள பர்வதமலை சென்றிருந்தேன். விடுமுறையில் இருந்த என் மகனுடன் காலை 9 மணிக்குள் புறப்பட முடிவு செய்திருந்தது தாமதமாகி 10-15க்குதான் புறப்பட்டோம். சேலம் 11-30க்கு சென்று அங்கிருந்து செங்கம் செல்வதற்காக திருவண்ணாமலை செல்லும் அரசுப்பேருந்தில் அமர்ந்திருந்தோம். 11.45க்குப் பேருந்து புறப்படும்போதுதான் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் இந்த பஸ் செங்கம் போகாது என்றார். ஓடிப்போய்க் கண்டக்டரிடம் கேட்டால் ஆமாம் போகாது என்று சாவகாசமாகப் பதில் அளித்தார். விழுந்தடித்துக் கீழே இறங்கி அடுத்த பஸ்ஸிற்காகக் காத்திருந்தோம். சற்று நேரத்தில் காஞ்சிபுரம் செல்லும் பஸ் வந்தது. இப்போது உஷாராக செங்கம் செல்லுமா என்று கண்டக்டரிடம் கேட்டபின்புதான் ஏறினோம். புறப்படும் நேரம் கேட்டால் 12.20 என்றார். 12.25க்குப் புறப்பட்டு நகர் எல்லை தாண்டுவதற்குள் ரயில்வே கேட்டில் சுமார் 30 நிமிடங்கள் வெயிட்டிங்.
மாலை 3.30--4 மணிக்குள் பர்வதமலை அடிவாரமாகிய தென்மாதிமங்கலம் அடைந்துவிட்டால் 7.30க்குல் மேலே ஏறிவிடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் பஸ்டிரைவரோ 30 மார்க் எடுத்து 5ம் வகுப்பிலேயே 5 வருடம் படிக்கும் மாணவன் போல 40 கிலோ மீட்டர் வேகம் தாண்டவேயில்லை. என் பக்கத்தில் அம்ர்ந்த அரூர் செல்லவேண்டிய மூதாட்டி ஒருவர் டிரைவரை பயங்கரமாகத் திட்டிக்கொண்டே வந்தார். த்ரூ பஸ் என்று ஏறினால் இவன் கட்டை வண்டி போல ஓட்டுகிறான் என்று திட்டியவர் சற்று நேரத்தில் இந்த டிரைவர் விழித்துக்கொண்டுதான் இருக்கிறானா அல்லது தூங்கிக்கொண்டு வண்டி ஓட்டுகிறானா என்று திட்டினார். அவர் சொன்னதுபோல டிரைவர் தூங்கிக்கொண்டு வண்டி ஓட்டினால் நம் நிலைமை என்னாவது?



             ஒருவழியாக 3 மணிக்கு ஊத்தங்கரை தாண்டி சற்று தூரம் சென்றபோது வழக்கமாக அரசு பஸ்கள் நிற்பதுபோல் ஒரு மோட்டலில் சாப்பிட நிறுத்தினார்கள். நாங்கள் லெமன் சாதம் எடுத்து சென்றதால் பஸ்ஸிலேயே சாப்பிட்டு முடித்தோம். பின்பு 4 மணிக்கு செங்கம் போய் சேர்ந்தோம். பின்பு 4.30க்கு சென்னை செல்லும் பேருந்தில் ஏறி 5.30க்கு தென்மாதிமங்கலம் சேர்ந்தோம்.


                    அடிவாரம் 3 கிலோ மீட்டர் தூரம் இருந்ததால் நடந்துசென்றால் தாமதாகிவிடும் என்று அங்கிருந்த ஆட்டோவில் சென்றோம். அடிவாரத்தில் வீரபத்ர சுவாமி கோவில் வரை ஆட்டோ செல்லும். அங்கே சுவாமி கும்பிட்டு 5.45க்கு ஏற ஆரம்பித்தோம். திருவல்லிக்கேணி பர்வதமலை பக்தர்கள் சார்பாக மேலே திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. தண்ணீர் முதல் அனைத்து பொருட்களும் கீழே இருந்துதான் தலைச்சுமையாகக் கொண்டுசெல்ல வேண்டும் என்று ஆட்டோ டிரைவர் சொல்லியிருந்தார்.

               படிக்கட்டு ஆரம்பிக்கும் இடத்தில் நிறையப்பைகளில் மணல் கட்டி வைத்திருந்தார்கள். நாங்களும் ஆளுக்கு ஒரு பை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தோம்.




                சுவாமிக்கு அபிஷேகத்திற்குப் பன்னீர்,சந்தனம்,தண்ணீர், நாங்கள் குடிக்கத்தண்ணீர், ஒருவேளைக்கு சாப்பாட்டுப் பொட்டலங்கள் , மாலை,பூ போன்றவைகளை ஆளுக்கு ஒரு பையில் முதுகில் மாட்டிக்கொண்டு சென்றோம். சுமார் 1250 படிகள் ஏற 1 மணி நேரம் ஆனது.


            சிறிய ஓலைக்குடிசைகளில் உள்ள கடைகளில்( இந்த மலையில் இவை டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள் போல. இளனீர்,பன்னீர் சோடா,பஜ்ஜி,தண்ணீர்பாட்டில்,இட்லி எல்லாமே கிடைக்கும்) டீ ஒரு தடவையும் பன்னீர் சோடா ஒரு தடவையும் குடித்தோம். பன்னீர் சோடா குடித்ததும் சற்றே தெம்பாக இருந்தது. இந்தக் கடைகள் இல்லாமல் இருந்தால் இம்மலை ஏறுபவர்களுக்கு எந்த ஆகார வசதியும் இல்லாமல் மிகவும் சிரமமாகிவிடும். அதற்குள் டி சர்ட் பனியன் ஆகியவை தெப்பமாக நனைந்துவிட அவற்றையும் கழற்றிவிட்டு நடக்க  ஆரம்பித்தோம்.(டி-சர்ட் மறுநாள் வீட்டிற்கு வந்து உலர்த்தும்வரை ஈரம் குறையவேயில்லை.


            பின்பு கரடுமுரடான, கற்கள் நிறைந்த மலைப்பாதையில்(இது பாதையே அல்ல. மழை பெய்தால் வெள்ளம் புரண்டு வரும் வழிதான்) ஒருமணி நேரம் நடந்தோம். அதற்குள் இருட்ட ஆரம்பித்துவிட்டதால் டார்ச் உதவியோடுதான் நடந்தோம்.


                     7.30க்கு கடப்பாரைப்படி ஆரம்பிக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். இந்த இடம் 120 டிகிரி சாய்வாக இருக்கும். இதில் பாறையில் துளை போட்டு கடப்பாறைகளை நட்டு அவற்றை சங்கிலிகளால் பிணைத்திருப்பார்கள்.





            அந்த சங்கிலிகளைப் பிடித்துக்கொண்டுதான் ஏற வேண்டும். அந்த சமயத்தில் மேலே இருந்துகூட சுமார் 15 பேர் இறங்கி வந்தார்கள். ஆனால் ஏறிக் கொண்டிருந்தது நாங்கள் 2 பேர் மட்டுமே. மலை ஏறி முடிக்க 10 நிமிடங்கள் இருக்கும்போது இருட்டில் இருந்து திடீரென்று ஒரு குரல்,



            “அய்யா,இந்தத் தண்ணீர் பாட்டில்களை மேலே கொண்டுபோக முடியுமா?” என்று. அந்த இடத்தில் பாறையில் மடு போன்று இருக்கும் இடத்தில் சுவர் வைத்து மழைநீரை சேமித்து வைத்துள்ளார்கள். ஒரு லிட்டர் ப்ளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி ஆளுக்கு இரண்டு பாட்டில்கள் வீதம் கொடுத்தனுப்பி மேலே சின்டெக்ஸ் தொட்டிகளில் நிரப்பி கட்டிட வேலைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். நாங்களும் ஆளுக்கு இரண்டு பாட்டில்கள் எடுத்துக்கொண்டு மேலே சென்றோம். 8.15 மணிக்கெல்லாம் மேலே சென்றுவிட்டோம்.

        அங்கிருந்து சுற்றிலும் பார்க்கும்போது   ஏதோ எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து பார்ப்பதுபோல் மிக அழகிய காட்சியாக இருந்தது. ஆலயத்தின் உள்ளே கற்பூரம் ஏற்ற வேண்டாம் என்று ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டாலும்கூட பக்தர்கள் ஏற்றிய கற்பூரப்புகை உள்ளே நிறைந்திருந்தது. எனவே உள்ளே இருந்த சுமார் இருபது பக்தர்களும் வெளியேறியபின் சற்று நேரம்கழித்து உள்ளே சென்றோம்


               வினாயகருக்கும் முருகருக்கும் கொண்டுசென்றிருந்த துண்டுகளை அணிவித்துவிட்டு மலர்தூவி வழிபட்டு பின் மல்லிகார்ஜுனர் சன்னதி சென்றோம். காசி போல் இங்கும் நாம் கர்ப்பக்கிரகத்தினுள்ளே சென்று அபிஷேகம் அலங்காரம் செய்து வழிபடலாம். உள்ளே சென்று பன்னீர் சந்தனம் அபிஷேகம் முடித்து பின்பு நாங்கள் கொண்டு சென்றிருந்த விபூதியையும் அபிஷேகம் செய்வித்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டோம்.

கீழே உள்ளது என் மகன் எடுத்த போட்டோ


இது 10 நிமிடம் கழித்து நான் எடுத்த போட்டோ



                அமைதியான அந்த சூழலில் நாங்கள் இருவர் மட்டும் உள்ளே சுமார் அரைமணி நேரம் இருந்து வழிபட்டது என்றும் மறக்க முடியாத தெய்வீக அனுபவமாகும்.
               பின்பு ப்ரமராம்பிகை அம்பாள் சன்னதியிலும் வழிபட்டபின் அங்கே இருந்த திருப்பணிக் கமிட்டி உறுப்பினரிடம் சிறிது நன்கொடை கொடுத்துவிட்டு வந்த வழியே சிறிது இறங்கினால் உள்ள மடத்திற்குப் புறப்பட்டோம். (கட்டிட வேலை நடப்பதால் கோயிலின் உள்ளே சிமெண்ட்,மண்ணாக இருந்ததால் அங்கே இரவில் தங்க முடியாது.)


                    பர்வதமலை மகான் மௌனயோகி விடோபானந்தர் குருஜி மடம் இங்கு வரும் பக்தர்களுக்குச் செய்யும் சேவைகள் மிகவும் போற்றப்பட வேண்டியவை. அவ்வளவு உயரத்தில் முற்றிலும் கருங்கற்களால் இரண்டு அடுக்குகளாகக் கட்டப்பட்ட மடம். கீழ் தளத்தில் பக்தர்கள் இரவில் வெளியில் குளிர் மற்றும் மழையில் சிரமப்படாமல் இரவு தங்கிச் செல்ல அனுமதிப்பதோடு மட்டுமல்லாமல் ஜெனரேட்டர் போட்டு சுடசுட உணவு அளிக்கிறர்கள். (மேலே எந்தவிதமான மின் வசதியும் கிடையாது) படுத்து உறங்கப் பாய்களும் தந்து உதவுகிறார்கள்.
               முன்பெல்லாம் குடிக்கும் தண்ணீர் கீழே இருந்துதான் பாக்கெட் தண்ணீராக சுமை கூலி கொடுத்துக் கொண்டு வருவார்கள். இப்பொது 20000 லிட்டர் கொள்ளளவில் ஒரு தொட்டி கட்டி மழைநீரை சேமித்து வைத்துப் பயன்படுத்துகிறார்கள். பக்தர்கள் தங்குவதற்கு இன்னும் கட்டிடம் விரிவுபடுத்த ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள்.


              4000 அடி  உயர மலையில் எந்த வசதியும் இல்லாத இடத்தில் இவ்வளவு உதவிகள் அவர்கள் செய்து வருவது மிகவும் உயர்ந்த சேவையாகும். அந்த மடத்திற்கு நன்கொடை வழங்க விருப்பம் உள்ளவர்கள் 9486268396, 9688505403 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு விபரங்கள் அறியலாம். இங்கு ராஜராஜேஸ்வரி விக்ரகம் உள்ளது. இங்கு அமர்ந்து தியானம் செய்ய விரும்புபவர்கள் அமைதியாகச் செய்யலாம்.


                   பர்வதமலைக்கு தென்மாதிமங்கலம், கடலாடி ஆகிய இரண்டு ஊர்களிலும் இருந்து செல்லலாம். நாங்கள் ஏறும்போது தென்மாதிமங்கலம் வழியாகச் சென்றோம். மேலே மடத்தில் இருந்த சுவாமிஜி அவர்கள் இறங்கும்போது கடலாடி வழியில் செல்லுங்கள்,அது சற்று தூரம் குறைவாக இருக்கும் என்று தெரிவித்ததால் அந்த வழியில்தான் வந்தோம். மலையை விட்டு இறங்கி ஒரு கிலோ மீட்டரில் அவர்கள் மடத்தின் ஆசிரமம் உள்ளது. பல வருடங்களாக இருந்த மகான் மௌனயோகி குருஜி அவர்கள் மூன்று மாதங்களுக்கு முன்புதான் முக்தியடைந்ததாகத் தெரிவித்தார்கள்.


அந்த மடத்தின் முகவரி:


பருவதமலை மகான் மௌனயோகி மடம்
கடலாடி (P.O)
திருவண்ணாமலை மாவட்டம்-606908


               அன்னதானத்திற்கு உணவுப்பொருட்கள் தர விரும்புபவர்கள் மேற்கண்ட விலாசத்தில் சேர்த்தால் அவர்கள் மேலே கொண்டுபோய் சேர்த்துக்கொள்கிறார்கள்.






                 மேலே சுவாமிக்கு அபிஷேகம் செய்ய விரும்புபவர்களும் தாங்கள் எந்த விதத்தில் செய்ய விரும்புகிறோம் என்பதை முன்கூட்டியே போன் செய்து சொல்லிவிட்டால் நாம் சொல்லும் தொகைக்கு ஏற்ப அபிஷேகப் பொருட்களை அவர்களே மேலே கொண்டுவந்து சேர்த்துவிடுகிறார்கள். நாம் பொருட்களை சுமக்கும் சிரமம் இல்லை. திருவண்ணாமலை போல் இங்கும் 26 கிலோ மீட்டர் பௌர்ணமி கிரிவலம் நடைபெறுகிறது.